Posted on: September 29, 2020 Posted by: Kedar Comments: 0

இதயத்தைப் பாதுகாக்க சக்தி வாய்ந்த எளிய வழிகள் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து பின்பற்றுவதுஆயுளை அதிகரிக்கும். எளிய வழிகளை மன உறுதியுடன் பின்பற்றினால் 100% இதய ஆரோக்கியத்துடன் வாழலாம்.

இரத்தக் கொதிப்பு வராமல் எச்சரிக்கையுடன் வாழ்ந்தால் பக்கவாதமும், மாரடைப்பு அபாயமும் முழுமையாக நீங்கும். இதை ஒட்டியே உணவுப் பழக்கங்கள் இருக்க வேண்டும். முழுத்தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், கீரை, மீன், விதைகள், தயிர் போன்ற உணவுகளை நன்கு சேருங்கள். தாராளமாகச் சாப்பிட வேண்டிய உணவுகள் இவை.

கால்சியம் பக்கவாதத்தைத் தவிர்க்கும். எனவே, பால், பாலாடைக்கட்டி, கொட்டை வகை போன்றவற்றை தினமும் அளவுடன் சேர்த்து வரவும். குறைவாகச் சாப்பிட வேண்டிய தவிர்க்கக் கூடாத உணவுகள் இவை.

சமையலில் அவசியம் வெள்ளைப்பூண்டு சேர்க்கவும்.

பீட்டா கரோட்டீன் என்ற சத்து நிறைய உள்ள காரட், முட்டைக்கோஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, புதினாக்கீரை நன்கு சேர்க்கவும்.

உணவில் உப்பைக் குறைக்கவும். நேரடி உப்பு வேண்டாம். தினமும் ஒரு தேக்கரண்டி உப்பே அதிகபட்ச அளவாகும்.

அப்பளம், சிப்ஸ், ஊறுகாய் அதிகம் உப்பு நிறைந்தவை. இவற்றைத் தவிர்க்கவும்.

மூன்று வேளையோ அல்லது ஐந்து வேளையோ நேரம் தவறாமல் உணவு சாப்பிட வேண்டும். அளவான உணவே போதும்.

நிறையத் தண்ணீர் அருந்தவும்.

காபியிலிருந்து தேநீருக்கு மாறவும்.

தினமும் பத்து நிமிடம் வீதம் மூன்று வேளையும் உடற்பயிற்சி செய்யவும்., இதனால் தினமும் உடற்பயிற்சி செய்ய முடியும்.

உடற்பயிற்சியாக நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி என எது ஒன்றை நீங்கள் செய்து வந்தாலும், உங்கள் அறையைச் சுத்தம் செய்வது, தினமும் தோட்டத்தைச் சுத்தம் செய்வது போன்றவை உடலின் எல்லா உறுப்புகளும் சக்தி பெற உதவும்.

கட்டடங்களில் லிப்ட், எஸ்கலேட்டர் போன்றவற்றைத் தவிர்த்து மாடிப்படிகளில் ஏறி இறங்குவதில் கவனம் செலுத்துங்கள். இதனால் இதயத்திற்கு ஆக்ஸிஜன் நன்கு கிடைக்கும்.

வீட்டில் எடை இயந்திரம் வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் தினமும் எடைபார்த்து, அதற்கு ஏற்ப உணவைக் குறைத்து உடற்பயிற்சி நேரத்தை அதிகரியுங்கள்.

புகை பிடிக்காதீர்கள்,
மது அருந்தாதீர்கள்.

போதுமான அளவு தினமும் தூங்குங்கள். குறைந்தது ஏழுமணி வரை நன்கு தூங்கவும். அதாவது இரவுத் தூக்கம்.

சோயாபால், சோயாமொச்சை போன்றவை உடலில் கெட்ட கொலஸ்ட்ரல் சேர்வதைத் தடுத்து, நல்ல கொலஸ்ட்ரல் அதிகரிக்க வழி செய்யும்.

சுண்டைக்காய், ஓட்ஸ், கொத்துமல்லிக்கீரைத் துவையல், கொள்ளு, முருங்கைகீரை, பீன்ஸ், டபுள்பீன்ஸ், கேழ்வரகு, பச்சைப்பட்டாணி போன்றவை எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து மிகுந்த உணவுகள். இவை கெட்ட கொலஸ்ட்ராலையும், கொழுப்பு உடலில் சேர்வதையும் தடுக்கின்றன. மேலும் மலச்சிக்கலும் ஏற்படாமல் தடுக்கின்றன.

இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரல் போன்றவற்றை மாதம் ஒருமுறையாவது பரிசோதித்து, அதற்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவும்.

வீட்டிலும், அலுவலகத்திலும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே கவனம் சிதறாமல் கடமையாற்றுங்கள். இதனால் அதிக நேரம் பணியாற்றி மன இறுக்கத்தால் அவதிப்படுவதைத் தவிர்த்திடுங்கள்.

மருந்து மாத்திரைகளைத் தவிருங்கள். ஒருமுறை உடல் நலத்திற்காக வாங்கிய மருந்துகளை மீண்டும் அதேபோல உடல் நலப் பிரச்னை வந்தால் பழைய சீட்டுப்படி மருந்து வாங்காதீர்கள். மருத்துவரைச் சந்திப்பதே பிரச்னைகளையும் செலவையும் குறைக்கும்.

வயதாக வயதாக இரவு உணவிற்குப்பிறகு மாதுளம் பழம் சாப்பிடும் பழக்கம் தொடர்வது நல்லது. இந்தப் பழத்தில் உள்ள எல்லாஜிக் என்ற அமிலம் இதயம் எப்போதும்
சிறப்பாக இயங்க உதவுகிறது. மாதுளம்பழம் இல்லையெனில், கறுப்பு நிறத் திராட்சையில் 50 கிராம் சாப்பிடவும். இதுவும் இதயத்தை ஆரோக்கியமாகப் பராமரிக்கும்.

மன இறுக்கம், வாழ்க்கையில் வெறுப்பு, தனிமை உணர்வு போன்றவை வராமல் தடுக்க ஆழ்ந்து மூச்சுவிடுதல், யோகாசனம், தியானம் போன்றவற்றைத் தினமும் பயிற்சி செய்து வாருங்கள். இதற்கென நேரம் ஒதுக்குவது எந்த வகையிலும் வீணானசெயல் அல்ல. எல்லா நேரமும் பதற்றமின்றி வாழலாம்.

மனம் விட்டுச் சிரிப்பது மிகச்சிறந்த குணப்படுத்தும் மருந்தாகும். தொலைக்காட்சியில் காமெடி காட்சிகளை இரவு தூங்குவதற்கு முன்பு பார்ப்பது நல்லது. மனம், இதயம், உடல் என மூன்றும் இறுக்கங்களில் இருந்து விடுபட உதவும்.

இதய பாதுகாப்பிற்கான வழிமுறைகளை இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் . N .செந்தில்குமார் விரிவாக எடுத்துரைக்கிறார் .

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment