Posted on: April 13, 2024 Posted by: Deepika Comments: 0

தமிழகத்தில் 15-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Rain in Tamil Nadu

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் வட்டி வதைக்கும் நிலையில் இன்று முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய (Rain in Tamil Nadu) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Rain-in-Tamil-Nadu

தென்னிந்தியப் பகுதிகளான மேல், வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், 14, 15-ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16, 17, 18 தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும். அதன் பின்னர் 16-ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை படிப்படியாக உயரக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு கேரள கடலோரப் பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

 

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment