Posted on: August 16, 2021 Posted by: Kedar Comments: 0

திருச்சி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி மக்களை அச்சத்தில் உறையச் செய்தது. பல உயிர்களையும் பலி வாங்கியது. சுகாதாரத்துறையினரும் மாவட்ட நிர்வாகத்தினரும் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக தொற்று எண்ணிக்கை மிக குறைந்துள்ளது.மூன்றாவது அலை பரவலை தடுக்க தற்போது கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கையை மாவட்ட நிர்வாகத்தின் வலியுறுத்தலின் பேரில் நூண்ணுயிரியல் துறையினர் அதிகப்படுத்தியுள்ளனர்.

பரிசோதனை அதிகப்படுத்தினாலும் பாதிப்பின் எண்ணிக்கை இன்னும் சீராகத்தான் உள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.பொது மக்களை 3- வது அலையில் இருந்து தப்பிக்க வைப்பதற்காக சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முதல் கட்டமாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நூண்ணுயிரியல் பிரிவு துறைத்தலைவர் கூறியதாவது:-

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை தொடர்ந்து 5 ஆயிரத்திற்கும் மேல் இருந்தது. அதில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்த வேளையில் பாதிப்பின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருந்தது. ஆனால் தற்போது அது முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது.மக்களிடம் கொரோனாவை எதிர்கொள்ளும் அளவிற்கு எதிர்ப்பு சக்தியின் அளவு உடலில் அதிகரித்துள்ளது. இதனால் எளிதில் கொரோனா வைரஸ் பொது மக்களை தாக்காத நிலை உருவாகியுள்ளது.

ஒருபுறம் இது மகிழ்ச்சியளித்தாலும் மறுபுறம் 3- வது அலையை எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது புதிதாக அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யும் ஆர்.டி. பி.சி.ஆர். எந்திரம் தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த எந்திரம் ஏற்கனவே இருப்பதை விட பன்மடங்கு அதிக திறன் கொண்டது. இதனால் தொடர்ந்து பரிசோதனையின் எண்ணிக்கையை குறைக்காமல் அதிகப்படுத்தி கொண்டே போகலாம். 2- வது அலையின் போது ஆக்ஸிஜன் இல்லாமல் அதிகளவில் உயிர்கள் பலியானது. ஆனால் இனி அப்படி நடக்க வாய்ப்பில்லை. ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் எந்திரமும் நம்மிடம் இருக்கிறது.

இதுவரையில் திருச்சி அரசு மருத்துவமனையில் மட்டும் சுமார் 8 லட்சத்து 36 ஆயிரத்து 44 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 47 ஆயிரத்து 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இனிமேல் தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment