உதவிப் பேராசிரியர் தேர்வு: விண்ணப்பத் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் அறிவிப்பு
Assistant Professor Examination
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் (Assistant Professor Examination) காலியாக உள்ள 4 ஆயிரம் உதவி விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தவர்கள், விண்ணப்பத்தில் ஏதும் திருத்தம் செய்ய மே 16ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை திருத்தம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5 மணி வரை, www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் மே 15ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கால நீடிப்பு வழங்கப்பட்டது. தேர்வு அறிவிப்பின் மூலம், 3 ஆயிரத்து 921 நடப்பு காலிப் பணியிடங்கள் மற்றும் 79 பின்னடைவு காலிப் பணியிடங்கள் என மொத்தம் 4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேர்வு முறை:
- உயர் கல்வித்துறையின் அரசாணை அடிப்படையில், 200 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
- நேர்முகத் தேர்விற்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
- போட்டித் தேர்வு கேள்விகள் முதுகலைப் பாடங்களில் இருந்து இடம் பெறும்.
- விண்ணப்பம் செய்தவர்கள் தங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம் கேட்டதன் அடிப்படையில், அதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
- உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்து கட்டணம் செலுத்தியவர்கள், தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பினால்,
- மே 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி மாலை 5 மணி வரையில் திருத்தம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விண்ணப்பத்தைச் சமர்பித்து, தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர். திருத்தம் செய்த பின்னர், அதில் மாற்றங்களை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. விண்ணப்பத்தில் மாற்றங்கள் செய்து சமர்பித்த பின்னர், வேறு எந்த மாற்றமும் செய்ய இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.