2024 – 2025 தமிழக பள்ளிக் கல்வித் துறையின் வருடாந்திர நாள்காட்டி வெளியீடு
Annual Calendar 2024 – 2025
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திங்கள்கிழமை ஜூன் 10 திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி செயல்பாடுகளுக்கான 2024-2025 ஆம் ஆண்டு கல்வியாண்டு நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.
அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ம் தேதி வரையும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை அளித்து, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்தாண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியானது. அதனால், பள்ளிகள் ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. எனினும், மாநிலம் முழவதும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் திறப்பு ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்படி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 10) திறக்கப்பட உள்ளன. இதற்கான வளாகப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகளை பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. முதல் நாளில் மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுதவிர பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், புவியியல் வரைப்படம் வழங்கப்படவுள்ளன. மேலும், புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கெனவே உள்ள பழைய அட்டையை கொண்டு மாணவர்கள் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, அட்டவணை உயர்கல்வி வழிகாட்டி முகாம் உட்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வருடந்தோறும் பள்ளிக்கல்வித் துறையால் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி வரும் கல்வியாண்டுக்கான (2024-25) நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது.
அதன்விவரம் வருமாறு: “கோடை விடுமுறை முடிந்து அனைத்து வகுப்புகளுக்கு ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இதுதவிர 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வு செப்டம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும். அதன்பின் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை வழங்கப்படும்.
அதன்பின் அரையாண்டு மற்றும் 2-ம் பருவத்தேர்வு டிசம்பர் 16 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்படும். தொடர்ந்து டிசம்பர் 24-ல் தொடங்கி ஜனவரி 1-ம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படும். அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 9 முதல் 17-ம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படும்.
பள்ளி வேலை நாட்கள் ஏப்ரல் 27-ம் தேதியுடன் நிறைவு பெறும். அதன்பின் கோடை விடுமுறை ஏப்ரல் 28-ம் தேதி முதல் வழங்கப்படும். மொத்த பள்ளி வேலை நாட்கள் 220 ஆக இருக்கும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்காட்டியில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு, செய்முறைத் தேர்வு தொடர்பான தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதற்கான விரிவான தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஆசிரியர்களுக்கு ஆண்டு முழுவதும் வழங்கப்பட உள்ள பயிற்சிகள், மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம், மனநலப் பயிற்சிக்கான அட்டவணை, உயர் தொில்நுட்ப ஆய்வகம் உட்பட முழுமையான விவரங்களும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.