உலக பாரா தடகளம் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அளவில் அதிக பதக்கம் வென்று சாதனை
Para Athletics
11-வது உலக பாரா தடகள (Para Athletics) சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் கோபே நகரில் நடந்து வரும் நிலையில் 100 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற போட்டியில் இந்திய அணி இதுவரை 12 பதக்கங்கள் (5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்) வென்று பதக்கப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது.
6-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான குண்டு எறிதலில் எப்46 பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சச்சின் சர்ஜிராவ் கிலாரி 16.30 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஆசிய சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் தக்க வைத்தார். இதற்கு முன்பு அவர் கடந்த ஆண்டு பாரீசில் டந்த உலக பாரா தடகள்தில் 16.21 மீட்டர் தூரம் வீசியதே ஆசிய சாதனையாக இருந்தது. அச்சாதனையை தகர்த்து மீண்டும் மகுடம் சூடியிருக்கிறார். கனடா வீரர் கிரேக் ஸ்டீவர்ட் (16.14 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், குரோஷிய வீரர் லூகா பாகோவிச் (16.04 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
உருளை கட்டை எறிதலில் (கிளப் த்ரோ) இந்திய வீரர் தரம்பிர் 33.61 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார். செர்பிய வீரர் ஜிலிஜ்கோ தங்கப்பதக்கத்தை (34.20 மீ.) தட்டிச் சென்றார். இந்திய அணி இதுவரை 12 பதக்கங்கள் (5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்) வென்று பதக்கப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது.
உலக பாரா தடகள போட்டி ஒன்றில் இந்தியா கைப்பற்றிய அதிகபட்ச பதக்க எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஆண்டு பாரீசில் நடந்த போட்டியில் 10 பதக்கங்கள் (3 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம்) வென்றதே அதிகபட்சமாக இருந்த நிலையில் புதிய வரலாறு படைத்துள்ளது. சீனா 18 தங்கம் உள்பட 48 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.