கோடை வெப்பத்தின் அதிகரிப்பால் ஏற்படும் ஆபத்தான ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள் என்ன?
Heat Stroke Symptoms
இந்தியா வரலாறு காணாத வெயிலின் தாக்கத்தை ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில் இருந்தே சந்தித்து வருகிறது. வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் சூழலில், மக்கள் மத்தியில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஹீட் ஸ்ட்ரோக் (Heat Stroke Symptoms) அபாயம் குறித்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி, மும்பை உள்ளிட்ட பல முக்கிய வட மாநில நகரங்களில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் பல இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை கடந்து பதிவாகி வருகிறது. வட இந்தியாவின் நிலை இப்படி என்றால், தென் இந்தியாவில் முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களுருவில், கடும் வெப்பம் மற்றும் பொய்த்துப் போன மழை காரணமாக, கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, அங்கு இயங்கிவரும் பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் வாய்ப்பை வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டிலும் வெயிலின் தாக்கம் உச்சத்திலேயே உள்ளது. ஏப்ரல் 14 சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் கரூர், வேலூர், ஈரோடு, தருமபுரி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை, மதுரை, நாமக்கல், சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்துவரும் சூழலில், மக்கள் மத்தியில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஹீட் ஸ்ட்ரோக் அபாயம் குறித்து, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை, அனைவரின் மத்தியிலும் ஏற்படும் இந்த ஹீட் ஸ்ட்ரோக்கிற்கான அறிகுறிகள் குறித்த தகவல்களையும் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.
ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள்
- மாறுபட்ட மன உணர்திறன்
- சிவந்த, வறண்ட சருமம்
- கடுமையான தலைவலி
- அதிக உடல் வெப்பம் (104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக)
- மனக்கவலை
- தலைசுற்றல் மயக்கம்
- தசை பலவீனம்
- வேகமான இதயத்துடிப்பு
- குமட்டல் வாந்தி எடுப்பது
குழந்தைகளுக்கான அறிகுறிகள் Heat Stroke Symptoms
- உணவு உண்ண மறுப்பது
- தேவையற்ற எரிச்சல்
- கண் வறண்டு போதல்
- மந்தமான நிலை
- வலிப்பு ஏற்படுவது
- ரத்தக்கசிவு
இவைகள் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புக்கான அறிகுறிகள் என தெரிவித்துள்ள ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. வெயில் காலத்தில் பின்பற்ற வேண்டிய பொதுவான வழிமுறைகளையும், ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு வழிமுறைகள்
- ஒருவர் நாள் முழுவதும் உடலுக்கு தேவையான தண்ணீரை பருக வேண்டும்.
- மென்மையான, வெண்ணிற பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
- வெளியில் செல்லும் போது, வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள கண் கண்ணாடி, குடை, தொப்பி உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும்.
- அதிக புரதம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- தேநீர், காபி, மது, சோடா உள்ளிட்ட பானங்களை தவிர்க்க வேண்டும்.