டிவி, ஸ்மார்ட் போன்: கவனச் சிதறலை ஏற்படுத்தும்- மாணவர்களுக்கு நீதிபதி அறிவுரை
TV, Smart Phone
சென்னை விஸ்வபாரதி நடுநிலைப் பள்ளியின் 80-ம் ஆண்டு விழாவில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பெரிய கருப்பையா கவனச் சிதறலை ஏற்படுத்தும் டிவியிலும், ஸ்மார்ட் போனிலும் (TV Smart Phone) லயித்துவிடாதீர்கள் என பள்ளி மாணவர்களுக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.
பள்ளியின் தாளாளர் கே.பி.சந்திரசேகரன் நினைவுப்பரிசு வழங்கினார். உடன் சென்னை விஐடி பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரி டீன் ரபிராஜ், கற்பகம் உயர் கல்வி அகாடமி ஜோதிடவியல் துறை தலைவர் கே.பி.வித்யாதரன் மற்றும் வாணி பெரிய கருப்பையா விழாவில் பங்கேற்றனர்.
சென்னை சூளை விஸ்வபாரதி நடுநிலைப் பள்ளியின் 80-வது ஆண்டுவிழா நேரு விளையாட்டரங்க கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற இவ்விழாவில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.பெரியகருப்பையா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: சென்னை மாநகரில் பல்வேறு கான்வென்ட் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு மத்தியில் மாணவர்களுக்கு தமிழ்வழி கல்வியை விஸ்வபாரதி நடுநிலைப்பள்ளி வழங்கி வருவது பாராட்டுக்குரியது. மாணவர்கள் எப்போதும் உயர்வாக சிந்திக்க வேண்டும். கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தால் நாம் எண்ணுவதை அடைய முடியும். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் நீதிபதிகளாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக வர வாழ்த்துகிறேன். மாணவர்கள் டிவி பார்ப்பதிலும், ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதிலும் லயித்துவிடாதீர்கள், அவை கவனச்சிதறலை ஏற்படுத்தும். பேசுவதற்கும் படிப்புக்கும் செல்போனை பயன்படுத்தலாம் என்று நீதிபதி கூறினார். ஜோதிட நிபுணரும், கற்பகம் உயர்கல்வி அகாடமியின் ஜோதிடவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் கே.பி.வித்யாதரன் பேசும்போது, கல்வி தான் நம்மை மேம்படுத்தும். பணத்தை கொடுத்தால் குறையும். ஆனால் கல்வியை கொடுத்தால் அது வளரும். மாணவர்கள் எதையும் ஆழமாக படிக்க வேண்டும் என்றார்.