
சிறுதானிய உற்பத்திக்கு மானியங்கள்: கோவை வேளாண் துறை அழைப்பு
Coimbatore Agriculture Department
கோவை மாவட்டத்தில் சராசரியாக 30,270 ஹெக்டேர் பரப்பளவில் சோளம், கம்பு, ராகி, தினை, சாமை, வரகு உள்ளிட்ட தானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டம் கோவை மாவட்டத்தில் ரூ.1.48 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்படுவதாக, கோவை மாவட்ட வேளாண்மைத் துறையினர் அழைப்பு (Coimbatore Agriculture Department) விடுத்துள்ளனர்.
சிறுதானியங்கள் சாகுபடி
சிறுதானியங்கள் குறைவான நீர் தேவை கொண்ட பயிர்களாகும். குறுகிய கால வளரும் பருவம் கொண்ட இவை, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதவை ஆகும். இவற்றை குறைந்த மண்வளம் கொண்ட பூமிகளும் சாகுபடி செய்யலாம். புரதச்சத்து, நார்ச்சத்து, நல்ல கொழுப்புச் சத்து, இரும்புச் சத்து இவற்றில் நிறைந்துள்ளது. கால்சியம் சத்துகள் நிறைந்தது. வயிற்றுப் புண், குடல் புண்ணை ஆற்றும் குணமுடையது. இவ்வளவு சத்துகள் கொண்ட சிறுதானியங்கள் சாகுபடியினை நமது மாவட்டத்தில் ஊக்குவிக்க மானியங்களும் தொழில்நுட்ப உதவிகளும் விவசாயிகளுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்படுகிறது.
- சோளம், கம்பு சாகுபடியில் தொழில்நுட்பங்களை தவறாது கடைபிடிக்க 2.5 ஏக்கர் சாகுபடி செய்ய ரூ.6 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
- உயர் விளைச்சல் ரகங்களை பயன்படுத்த 10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட தானிய ரகங்களுக்கு கிலோவுக்கு 50 % மானியம் வழங்கப்படுகிறது.
- விவசாயிகளே விதை உற்பத்தி செய்து வழங்கும் போது, விதை உற்பத்தி மானியம் கிலோவுக்கு ரூ.30 மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
- பயிர்களுக்கு தேவையான நுண்ணூட்டங்களான கந்தகம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மக்னீசியம், போரான், குளோரின், மாலிப்டினம், மாங்கனீசு ஆகிய சத்துகளை வழங்கக்கூடிய
- சிறு தானிய நுண்ணூட்டச்சத்து ஹெக்டேருக்கு 12.5 கிலோவுக்கு ரூ.500 மானியம் வழங்கப்படுகிறது.
- காற்றில் உள்ள தழைச்சத்தை பயிர்களுக்கு வழங்கக்கூடிய திரவ உயிர் உரம் அசோஸ்பைரில்லம்,
- மண்ணில் கரையாமல் உள்ள மணிச்சத்தை கரைத்து பயிர்களுக்கு வழங்கக்கூடிய பாஸ்போபேக்டீரியா திரவ உயிர் உரங்கள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
- பெய்யும் மழை நீரை அந்தந்த வயல்களிலேயே சேமிக்க, கோடை உழவு செய்ய இரண்டரை ஏக்கருக்கு கோடை உழவு மானியம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது என தெரிவித்து உள்ளார்.