Posted on: April 20, 2024 Posted by: Brindha Comments: 0

முதல்கட்ட மக்களவை தேர்தல் – தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு

Lok Sabha Elections

நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் (Lok Sabha Elections) 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக, தமிழகத்தின் 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி  இடைத்தேர்தலும் நேற்று நடந்தது. அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகின.

Lok Sabha Elections

வாக்குப்பதிவு

தமிழகத்தின் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இத்தேர்தலில், 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள், 8,467 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததில் 10.52 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள் ஆவர். வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்து வாக்களிக்கும் வகையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்தளம், சக்கர நாற்காலிகள், அதை இயக்க தன்னார்வலர்கள் மட்டுமின்றி, நிழற்பந்தல், குடிநீர், கழிப்பறை, குழந்தைகள் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப் பட்டிருந்தன. பதிவு அடிப்படையில், மாற்றுத் திறனாளிகள், முதியவர்களுக்கு அரசு சார்பில் போக்குவரத்து வசதியும் செய்து தரப்பட்டது. 190 கம்பெனி துணை ராணுவத்தினர், காவல் துறையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற காவல் துறையினர், வெளி மாநில காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் என 1.30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தலைமை தேர்தல் அதிகாரி Lok Sabha Elections

  • பதற்றமான 8,050 மற்றும் மிக பதற்றமான 181 வாக்குச்சாவடிகளில் இணைய கேமரா, துணை ராணுவப் படையினர், நுண் பார்வையாளர் தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டனர்.
  • 44,801 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி, “வெப் ஸ்ட்ரீமிங்” முறையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் நேரலையாக கண்காணித்தனர்.
  • தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவும் நேரில் சென்று கண்காணித்தார்.
  • 39 மக்களவை, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 68,321 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
  • அதிகாலை 5.30 மணிக்கே வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், அதிகபட்சம் 50 வாக்குகள் வரை பதிவு செய்யப்பட்டு ஒத்திகை நடத்தப்பட்டது.
  • பின்னர் அந்த வாக்குகள் அழிக்கப்பட்டு, விவிபாட் இயந்திரத்தில் பதிவானவாக்குகள் எடுத்து சரிபார்க்கப்பட்டு, தனியாக உறைகளில் பத்திரப்படுத்தப்பட்டன.
  • பின்னர், இயந்திரம், சீலிடப்பட்டு, வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டது.
  • காலை 6.30 மணி முதலே பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையாற்றினர்.
  • மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடியும் நேரத்தில், வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
  • வாக்குச்சாவடிகளில் இரவு 7.30 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது.
  • வாக்குப்பதிவு முடிந்ததும், முகவர்கள் முன்னிலையில், பதிவான வாக்குகள், பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, மின்னணு இயந்திரம் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக பெட்டியில் வைக்கப்பட்டது.
  • வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பு அறையில் (‘ஸ்டிராங் ரூம்’) வைக்கப்பட்டன.
  • துணை ராணுவம், உள்ளூர் போலீஸார், ஆயுதப் படையினர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  • தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் 72.09 %, விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 64.54 % வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக் குறிச்சியில் 75.67 %, குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 % வாக்குகள் பதிவாகியிருந்தன.
  • அதிகப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், எவ்வித சட்டம் – ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல், தமிழகத்தில் தேர்தல் சுமுகமாக, அமைதியாக நடந்ததாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment