வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு – 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Depression over Bay of Bengal
தமிழகத்தை ஒட்டி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு (Depression over Bay of Bengal) பகுதி உருவாகியதை தொடர்ந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்ததாழ்வு பகுதி தற்போது உருவாகியுள்ளது. வடகிழக்கு திசையில் நகர்ந்து, 25-ம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக் கூடும். பிறகு, மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து, வடகிழக்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25 முதல் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் தெரிவித்தார்.