Posted on: September 20, 2024 Posted by: Deepika Comments: 0

நாற்பதும் திமுக கூட்டணிக்கே! – தமிழகத்தில் அதிமுக+, பாஜக+ ‘வாஷ் அவுட்’

தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி தொடங்கி எண்ணப்பட்ட நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணியை வாஷ் அவுட் செய்து 40 இடங்களையும் திமுக கூட்டணியே வென்றுள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழகத்தின் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியிலும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தாரகை வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகள் கொண்ட இந்த மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக தலைமையில் ஓர் அணி, பாஜக தலைமையில் ஓர் அணி, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என 4 முனைப் போட்டியுடன் தேர்தல் களம் சூடுபிடித்த நிலையில் மற்ற தென் மாநிலங்களில் பாஜகவின் வீச்சு பெரிய அளவில் இருக்க தமிழகத்தில் மட்டும் பாஜகவை கணக்கைத் தொடங்கவிடாமல் கட்டுப்படுத்தியுள்ளது திமுக கூட்டணி.

கவனம் பெறும் பாஜகவின் வாக்கு சதவீதம்: இருப்பினும், இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பல்வேறு இடங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் இரண்டாம் இடம் பிடித்து அதிமுகவை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி அந்தக் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மதுரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் மதுரை கிழக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய தொகுதிகளில் அதிமுகவை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றது. மேலூர், மதுரை வடக்கு, மதுரை மேற்கு தொகுதிகளில் பாஜகவை விட அதிமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment