தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை
Heavy Rain Warning
அக்னி நட்சத்திரம் தொடங்கி மக்களை வாட்டி வதைத்த நிலையில் 10 மாவட்டங்களுக்கு நாளை (15/05/24) கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
தென்தமிழகம்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (வியாழக்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 15.05.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாத புரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.