தமிழக வெற்றிக் கழகம் கட்சி நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Tamizhaka Vetri Kazhagam
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaka Vetri Kazhagam) கட்சியின் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகிகள் பட்டியல் தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என பத்திரிகை வாயிலாக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கி அப்போதே கட்சியின் பெயர், தலைமை நிர்வாகிகள் பெயர் பட்டியலை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்தார். கட்சி நிர்வாகிகளுடன் நடிகர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து தொடர்ச்சியாக ஆலோசனை கூட்டம் நடத்தி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வந்தனர். மேலும், கட்சியில் புதிய உறுப்பினர்களை ஆன்லைன் செயல மூலம் சேர்க்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, கட்சியின் பெயர், தலைமை நிர்வாகிகள் பட்டியலை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொதுமக்கள் பார்வைக்கு அறிவிப்பாக பத்திரிக்கையில் தேர்தல் ஆணையம் வெளியிடும். அதில் ஆட்சேபனை இருந்தால் தேர்தல் ஆணையத்திடம் 30 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சி பெயர் மற்றும் நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் ஆணையம் பத்திரிக்கையில் விளம்பரமாக வெளியிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவிப்பு
- தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் ஓர் அரசியல் கட்சி பதிவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- கட்சியின் அலுவலகம், மனை எண் 275, சீஷோர் டவுன், 8-வது அவென்யூ, பனையூர், கிழக்கு கடற்கரை சாலை, சென்னை 600119-ல் அமைந்துள்ளது.
- இந்திய தேர்தல் ஆணையத்திடம் தங்களை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யக் கோரி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 29ஏ-ன் கீழ் விண்ணப்பித்துள்ளது.
- கட்சியின் நிர்வாகிகளாக, தலைவர் ஜோசப் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்து என்ற முனுசாமி, பொருளாளர் வெங்கடராமணன்,
- துணை நிலைய செயலாளர் ராஜசேகர், இணை கொள்கை பரப்புச் செயலாளர் தாஹிரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்வதற்கு யாருக்கேனும் ஆட்சேபனை இருப்பின்,
- அவர்கள் தங்களுடைய ஆட்சேபனையை அதற்குரிய காரணங்களோடு, செயலர் (அரசியல் கட்சி),
- இந்திய தேர்தல் ஆணையம், நிர்வாச்சன் சதன், அசோகா சாலை, டெல்லி – 110001 என்ற முகவரிக்கு 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.