கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடக்கம்
Polling
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ள நிலையில் மக்களவை தேர்தலில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு (Polling) நடந்தது. 2-ம் கட்டமாக கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
2-ம் கட்ட தேர்தல்
கேரளா – 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் – 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் – தலா 8, மத்திய பிரதேசம் – 6,பிஹார், அசாம் – தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் – தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்திய பிரதேசத்தின் பேதுல் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்க இருந்தது. பகுஜன் சமாஜ் வேட்பாளர் அசோக் பலாவி, சமீபத்தில் மாரடைப்பால் காலமானதால், அங்கு வாக்குப்பதிவுமே 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்ட தேர்தலில் 1,098 ஆண்கள், 102 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 1,202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.