மக்களவை தேர்தல்: நாளை மாலையுடன் ஓய்வு பெறும் தேர்தல் பிரச்சாரம்
Election Campaign
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 39 மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வு (Election Campaign) பெறுவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி
முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து, கடந்த மார்ச் 31-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே, தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்துக்கு 48 மணிநேரம் முன்னதாக என்ற அடிப்படையில், நாளை (ஏப்ரல் 17, புதன்கிழமை) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைவதையொட்டி, அனைத்து தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களவை தொகுதிகள்
- தமிழகத்தை பொருத்தவரை 39 மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் வரும் 19-ம்தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
- தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 39 மக்களவை தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். விளவங்கோடு தொகுதியில் 10 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
- திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி,
- அதிமுக தலைமையிலான கூட்டணி,
- பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி
- நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுகிறது.
- தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி,மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று கூறியதாவது:
- தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகள், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் ஏப்ரல் 19-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுவதால், 17-ம் தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.
- அந்த நேரத்துக்குள் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
- அதன்பிறகு, அமைதி பிரச்சாரம் உள்ளிட்ட எந்த விதமான பிரச்சாரத்துக்கும் அனுமதி இல்லை.
- மாலை 6 மணிக்கு மேல் அந்தந்த தொகுதிக்கு தொடர்பு இல்லாத அனைவரும் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் எனத் தெரிவித்தார்.