ஏப்ரல் 19: அனைத்து தியேட்டர்களுக்கும் விடுமுறை அறிவிப்பு!
April 19 Holiday
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் (April 19 Holiday) தேதி நடைபெற உள்ள நிலையில், அன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தியேட்டர் ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் வரும் 17-ந்தேதி மாலை 5 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் 100 % வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் மாநிலம் முழுவதும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், தேர்தல் ஆணையமும் எடுத்து வருகின்றன.
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, தனியார் நிறுவனங்களுக்கும், வாக்குப்பதிவு நாளில் பொது விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
- மேலும் விடுமுறையை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நாளிலிருந்து, வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.
- வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ந்தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை
பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் கோயம்பேடு மார்க்கெட்டும் வாக்குப்பதிவு தினத்தன்று மூடப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
திரையரங்குகள் விடுமுறை April 19 Holiday
புதுப்படங்கள் வெளியாகும் வெள்ளிக்கிழமையன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால், தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடப்படுமா? அதில் பணிபுரியும் ஊழியர்கள் வாக்களிக்கும் வகையில் விடுமுறை விடப்படுமா? என்று கேள்வி எழுந்த நிலையில், தமிழ்நாட்டில் பணியாற்றும் திரையரங்க ஊழியர்களுக்கு வரும் 19ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பொதுச்செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இந்திய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் அன்று 19.04.2024 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.