கொல்லி மலை இயற்கையின் காட்சிகள்
கொல்லி மலை (Kollimalai Hills) இந்தியாவின் தெற்குப் பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். 1000 முதல் 1300 மீ. உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இதன் உயர்ந்த சிகரம் 4663 அடி (1400 மீ.) ஆகும். இதை வேட்டைக்காரன் மலை என்றும் கூறுவர். கொல்லிமலை நாமக்கல் மாவட்டத்தின் ஐந்தாவது வட்டமாக அக்டோபர் 2012 அன்று தொடங்கப்பட்டது.
உயிரினங்களைக் கொல்லும் சூர் வாழ்ந்ததால் இம்மலைக்குக் ‘கொல்லி’ என்னும் பெயர் அமைந்தது என்ற மொழியியல் அடிப்படையற்ற கருத்தும் உண்டு. இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது.
‘கொல்’ என்னும் ஒலிக்குறிப்புச் சொல் ஓசையைக் குறிக்கும். அதன் அடிப்படையிலும் கொல்லிமலை எனப் பெயர் வந்திருக்கலாம் என்பர். இம்மலைகளில் காணப்படும் அதிகப்படியான மூலிகைகளினால் ‘மூலிகைகளின் ராணி’ என்றும் அழைக்கப்படுகிறது
பழந்தமிழ் நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் 200 இல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தார். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து வன்பரணர் என்னும் புலவர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது.
ஆகாய கங்கை அருவி
கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்த அருவியில் குளித்தால் செய்த
பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது.
கொல்லிப் பாவைக் கோவில்
கொல்லி மலையில் கொல்லிப் பாவைக்கு ஒரு கோவில் உள்ளது.
அறப்பளீஸ்வரர் கோவில்
சதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார். இங்குள்ள ஈசன் ‘அறப்பள்ள மகாதேவன்’,
‘அறப்பளி உடையார்’ என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் அய்யாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள அறப்பளீஸ்வரர்
அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் ‘ மீன் கோயில் ‘ என்றும் அழைக்கப்படுகிறது.
முருகன் கோவில் (Kollimalai Hills)
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேட்டுவர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சிவன், பார்வதி, விஷ்ணு, இடும்பன் மற்றும் விநாயகருக்கும் இங்கு ஆலயங்கள் உள்ளன.
மாசி பொியசாமி கோவில்
கொல்லி மலையின் ஒரு மலை உச்சியில் பொியசாமிக்கு என்று ஒரு கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. கோவிலுக்கு செல்ல முறையான படிக்கட்டு வசதிகள் இல்லை. மாசி மாதத்தில் மிக விமாிசையாக திருவிழா கொண்டாடப்படுகின்றது.
படகு சவாரி
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும்.
நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. கொல்லி மலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம், தம்மம்பட்டி, மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும், பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர்.