2100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கல்லணை, அணை கட்டுமான தொழில்நுட்பம்,சர் ஆர்தர் காட்டன், சோழ மணி மண்டபம் பற்றிய விவரங்கள் (Kallanai Dam)
Kallanai Dam
காவிரியின் வெள்ளப்பெருக்கை தடுக்கவும், மிகுதியான நீரைப் பயன்படுத்தி பாசனப் பரப்பை அதிகரித்து விவசாயத்தை செழிக்க செய்யவும் கட்டப்பட்ட முதல் அணை கல்லணை (Kallanai Dam) தான்.
ஏறக்குறைய 2100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருந்தாலும் இன்றும் கல்லணை பயன்பாட்டில் உள்ளது தான் அதன் சிறப்பே.
அணை
- அணை எனப்படுவது ஒரு நீரோட்டத்தின் குறுக்க கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இது நீரோட்டத்தைத் தடுக்கவும் திசை மாற்றவும் பொதுவாக நீரைத் தேக்கவும் பயன் படுகின்றன.
- இவை பொதுவாக வெள்ள தடுப்பிற்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் கட்டப்படுகின்றன.
கல்லணை (Kallanai Dam)
- இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணை கல்லணையாகும். இந்த அணை கரிகால் சோழனால் முதலாம் நூற்றாண்டில் காவிரி மீது கட்டப்பட்டுள்ளது.
- இந்த அணை தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் உள்ள கல்லணை தோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது.
- திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி ஆறு முக்கொம்பில் வடபுறமாக கொள்ளிடம், தென்புறமாக காவிரி என இரண்டாகப் பிரிகிறது.
- முக்கொம்பில் ஆங்கிலேயர் ஆட்சியில் மேலணை கட்டப்பட்டுள்ளது. காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் இடையில் திருவரங்கம் ஆற்றுத்தீவு உள்ளது. அங்கிருந்து காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது.
- அங்கு காவிரி ஆறானது உள்ளாறு (கொள்ளிடம்), காவிரி, வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரிகிறது. உள்ளாறு மீண்டும் கொள்ளிடத்தில் இணைகிறது. காவிரி இவ்வாறு பிரியுமிடத்தில் தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.
கல்லணை அமைப்பு (Kallanai Dam)
- கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, மற்றும் உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும்.
- 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
அணை கட்டப்பட்ட தொழில்நுட்பம்
- காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன.
- அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும்.
சர் ஆர்தர் காட்டன் (Kallanai Dam)
- பிரிட்டிஷ் பாசனப் பொறியாளர் சர். ஆர்தர் காட்டன். அவர் மகத்தான அணை என குறிப்பிடவும் காரணம் இருக்கிறது. அதிக நீர் வரத்தால், மணல் மேடுகள் கல்லணைக்கு முன் குவிந்தன. காவிரி படுகை மேடாக மாறியது.
- கொள்ளிடம் பள்ளப் படுகையாக மாறிவிட, ஆற்றில் வரும் நீர் முழுதும் கொள்ளிடத்தில் பாய, காவிரிப் பாசனப்பகுதி வறண்டது. இந்தப் பிரச்னையிலிருந்து டெல்டாவை காப்பாற்ற யோசித்த ஆங்கிலேய அரசு,சர் ஆர்தர் காட்டனிடம் இந்த பணியை ஒப்படைத்தது.
- மணற்பாங்கான ஆற்றுக்குள் அடித்தளம் அமைக்கப் பள்ளம் தோண்டினால் நீர் ஊறிக் கொண்டே இருக்கும். நிச்சயம் நீர் ஊற்றில் அடித்தளம் அமைக்க முடியாது. பின் எப்படி கரிகாலன் கல்லணையை கட்டினார்? இதனை ஆய்வு செய்த ஆர்தர் காட்டன், அணைக்கட்டின் அடித்தளத்தில் 12 அடி ஆழம் வரை குழி தோண்டிப் பார்த்திருக்கிறார்.
- அணையின் ரகசியம் அப்போது தான் அவருக்கு தெரிந்திருக்கிறது. அணைக்கட்டின் 12 அடி ஆழத்திற்கு கீழே பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அணை கட்டப்பட்டு இருக்கிறது. அந்த பாறைகளின் இணைப்புக்கு களிமண் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
- இதன் காரணமாக அவர் கல்லணையை ‘மகத்தான அணை’ என குறிப்பிட்டு இருக்கிறார். இவர் இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என்று போற்றப்படுக்கிறார்.
- 19ம் நூற்றாண்டு வரை, ஆண்டு முழுவதும் நீர் ஓடுகிற மணற்பாங்கான படுகையின் மேலணை கட்டும் தொழில் நுட்பம் புரியாத புதிராகவே இருந்தது. கரிகாலனின் தொழில்நுட்ப புதிரை அவிழ்த்து, தமிழர்களின் பெருமையை உலகுக்குச் சொன்னவர் சர். ஆர்தர் காட்டன்.
கரிகால சோழன் மணிமண்டபம்
- பல நூற்றாண்டுகளை கடந்தும் உறுதியோடு நிற்கும் கல்லணை தமிழர்களின் கட்டுமான திறனை பறை சாற்றி கொண்டிருக்கிறது. பழமையான இந்த அணையை கட்டிய கரிகால சோழனை கெளரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி
- ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் யானை மீது கரிகால சோழன் அமர்ந்த நிலையில் சிலை வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
- கல்லணை அறிவியல் வளர்ச்சிப்பெறாத அந்த நாட்களிலேயே புதுமையான,நுணுக்கமான தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டிருப்பது, உலகையே வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
கொடைக்கானலை மிஞ்சும் இயற்கை அழகு கொண்ட சுற்றுலாத்தலங்கள் நம்ம திருச்சியில் வாங்க பார்க்கலாம்
மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click to rate this post!
[Total: 0 Average: 0]