திருச்சியில் மாநில வேளாண் கண்காட்சி திருவிழா ஜூலை 27 முதல் 29 வரை விவசாயிகளுக்கு அரசு அழைப்பு
திருச்சியில் வரும் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை மாநில வேளாண்மை கண்காட்சி திருவிழா நடைபெறும் என்று வேளாண்மை துறை அறிவித்துள்ளது. வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது மாநில வேளாண் கண்காட்சி திருச்சியிலும், உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள், வாழை மலர்களுக்கான கண்காட்சி சென்னையிலும், பலாவுக்கான கண்காட்சி பண்ருட்டியிலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில்நடைபெற்றது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு தேவைப்படும் விதைகள், தென்னங்கன்றுகள் மற்றும் பழமரக்கன்றுகள் ஆகியவற்றை காட்சிப்படுத்துவதுடன், அவற்றை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும். விவசாயிகளுக்கான அனைத்து திட்டங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அமைத்திட வேண்டும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், விவசாயிகளுக்கான புதிய தொழில்நுட்பங்கள், மின்னணு விற்பனை, வேளாண் காடுகள், உயரிய தோட்டக்கலை தொழில்நுட்பம், நவீன வேளாண் இயந்திரங்கள், வேளாண் ஏற்றுமதி போன்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
வேளாண் கருத்தரங்கில் கலந்துக்கொண்ட அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களின் பெயர்கள்
வேளாண்மை உற்பத்தி ஆணையர் செயலாளர் | சமயமூர்த்தி |
வேளாண்மைத்துறை ஆணையர் | சுப்பிரமணியன் |
சிறப்புச் செயலாளர் | நந்தகோபால் |
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் | நடராஜன் |
தமிழ்நாடு நீர்வடிப்பகுதி முகமையின் செயல் இயக்குநர் | (பொ) அன்பழகன் |
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் | பிருந்தாதேவி |
வேளாண் பொறியியல்துறை தலைமைப் பொறியாளர் | முருகேசன் |